Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Sunday, January 12, 2014

அக்ஷதை

"மேடை மேல இருக்கற  அந்த முருகன் படம் சாஞ்சு போயிர்க்கு பாரு", என்று பலமுறை சொல்லியும் ஒருத்தர் கூட கேட்கவில்லை. தாத்தாவும் விடுவதாய் இல்லை. ஏழாவது முறையாக தன் மகன் வெங்கி (வெங்கட்ராமன்) பெயரை கூப்பிட்டார். எட்டாவது முறை கூப்பிடுவதற்கு முன் ஒரு டம்பளர் காபி உள்ளே போனது.

**********

என்னதான் வாஷிங்டனில் நடத்தினாலும் மயிலாப்பூர் கணக்காக எல்லா சொந்த பந்தங்களும் வந்த வண்ணம் இருந்தனர். ஆறு பையன் மூன்று பெண்கள், அதில் வெங்கி மட்டுமே பெண் குழந்தைக்கு அப்பவாகும் பாக்கியம் பெற்றிருந்தான். அதன் பலனாக வர்ஷா அனைவருக்கும் செல்ல குழந்தை ஆனாள். தாத்தாவுக்கு இன்னும் சற்று அதிகமாகவே.

தானே பெயர் வைத்து, தானே நடை பழக்கிவிட்டு, குளிப்பாட்டுகையில் கண்ணில் ஜான்சன் சோப்பு விழுந்தால் பாட்டியை திட்டுவதில் முடித்து, அனைத்தும் தாத்தா பேத்தி சேர்ந்து போட்ட ஆட்டம். இன்று தோள் தாண்டி வளர்ந்து திருமண மேடையில் அமரப்போகும் வேளை வந்து விட்டது. மூன்றிலிருந்து இருபத்துமூன்று வரை ஏறியது வர்ஷாவின் வயது மட்டும் அல்ல, தாத்தாவின் முகத்தில் சுருக்கங்களும்.

பாட்டியை மறந்துவிட்டோமே, காவி கலர் பொடவை தான் முஹூர்தத்துக்கு,  என்று பெண் பார்க்கும் படலம் தொடங்கும் முன்னிலிருந்து பாட்டி ஒற்றைக்காலில் நிற்காத  குறை  தான்.

"எவ்ரிதிங் இஸ் ரெடி, வர்ஷாவ வர சொல்லுங்கோ.", என்று அமெரிக்கன் ஆக்செண்டில் செல் போன் சாஸ்த்ரிகள் கூற, வர்ஷாவின் அம்மா மணமகள் அறையிலிருந்து "டூ மினிட்ஸ்" என்று குரல் கொடுத்தார்.

"டூ மினிட்ஸா, உள்ள என்ன நூடில்ஸா பண்ணின்றுக்கா" என்று வெங்கி 'ஜோக்' அடிக்க, மாமனார் ஆயிற்றே என்று சஞ்சயும், தக்ஷனை கொறஞ்சுட போறது என்று சாஸ்த்ரிகளும் சிரிக்க முயன்றனர்.

சொன்னவாறே ரெண்டு நிமிடத்திற்குப்பின் , காவி புடவையும் புன்னகை மலர்ந்த  முகமுமாக, நெற்றிக்குங்குமத்தின் மேல் சின்னதாய் விபூதி வைத்ததைப்போல் வெட்கப்பட்ட கன்னங்களுக்கு  நடுவே லேசாக வெள்ளை பற்கள் தெரிய மேடையில் வந்து அமர்ந்தாள்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அத்தனை மகிழ்ச்சி. "எத்தன நாள் சொல்லிர்கேன் பொடவை கட்டிக்கோ அவ்ளோ அழகா இருப்பேனு, இப்போ தெரியறதா?" என்று செல்லமாக கோபித்துக்கொண்டார் பாட்டி.

**********

வெங்கி மடியில் அமர்ந்து, கழுத்தில் தாலி ஏற, தாத்தாவும் பாட்டியும் கண்ணில் நீர் வெயத்துக்கொண்டனர்.

"பட்டு கட்டிப் பூமுடிக்க,
மன்னன் வந்தான் கைப்பிடிக்க,
மணமகள் ஆகிறாள் இவள்,
மாங்கல்யம் காண்கிறாள்"  என்று பக்கத்துக்கு வீட்டு டிவியில் விளம்பரம் ஒளிபரப்பானது.

மந்தவெலியிலிருந்து, ஸ்கைப்பில் அக்ஷதை போட முடியவில்லை என்பதே தாத்தாவின் ஒரே வருத்தம்.
   

Sunday, September 8, 2013

Thalaivar, Kamal and Google translate

I read this article (the article translated famous Hollywood quotes to Japanese and then back to English and they turned out to be quite funny). I decided to try the same using Rajnikanth and Kamalhassan quotes. They ended up giving me amusing results as well. 

So each segment is of this format. First is the original Tamil quote. Second is the Japanese translation translated back to Tamil, the third is the English translation translated back to Tamil.

***

SIVAJI

பூ விழுந்தா பூ பாதை, தலை விழுந்தா சிங்க பாதை  

மலர்கள் பாதை, பாதை சிங்கம் தலை வீழ்ச்சி வீழ்ச்சி

பூ பூ பாதை, பாதை லயன் தலைவர் வீழ்ச்சி வீழ்ச்சி

***

BAASHA:

நான் ஒரு தரவை சொன்னா நூறு தரவை சொன்னா மாதிரி 

நான் ஒரு நூறு தரவு என்று தரவு மாதிரியை

நான் ஒரு நூறு தரவு என்று தரவு மாதிரியை

***

MUTTHU:

கிடைக்கறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கறது கிடைக்காது 

நீங்கள் அங்கு பெற வேண்டும்

அங்கு கிடைக்கும்

***

PADAYAPPA:

அதிகமாக ஆசைப்படுகிற ஆணும் அதிகமாக கோபப்படுகிற  பெண்ணும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை 

மாறாக ஒரு மனிதனை மற்றும் கோபம் விட, நான் ஒரு பெண் விட ஒரு வரலாறு இருக்க வேண்டும்

பெண் நான் கோபம் மற்றும் மனிதன், இல்லை வரலாற்றை விட வேண்டும்

***

SIVAJI:

பன்றிகள் தான் கூட்டமாக வரும் சிங்கம் தனியாகதான் வரும் 

நான் பன்றி மட்டுமே கூட்டத்தில் ஒரு சிங்கம் போல் வந்து

கூட்டத்தில் தனியாக பன்றிகளை சிங்கம் போல் வருகிறது

***



DASAVATHARAM:

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன் 

இது கடவுள் எனக்கு சொல்லவில்லை என்றால், நீங்கள் அதை நன்றாக உள்ளது

கடவுள் சொல்லவில்லை என்றால் அது நன்றாக இருக்கும் என்று

*** 

16 VAYADINILE:

சந்தைக்கு போகணும் அம்மா திட்டுவாள் காசு கொடு 

சந்தை துஷ்பிரயோகம் செல்ல அவளுக்கு அந்த பணம் கொடு

சந்தை துஷ்பிரயோகம் செல்ல அவளுக்கு அந்த பணம் கொடு

***

NAYAKAN: 

நான்கு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பு இல்லை 

4 பேர் நல்ல தோல்வி எதுவும் செய்ய முடியாது என்றால்,

நான்கு பேர் நல்லதல்ல தவறு ஏதும் இருந்தால்

***

MMKR:

யாரது கத்திரிக்காய் தோலை தட்டோடு தூக்கி எறிவது  

எரியும் தடுக்க, அதை யார் கத்திரிக்காய் தோல்

யார் தட்டில் வைத்து கத்திரிக்காய் தோல் துரத்த முடியும்

***

VASOOLRAJA:

டேய் கலை அலங்காரம் மறுபடியும் வீட்டை மருத்துவமனையாக மாற்று 

மீண்டும் மருத்துவமனைக்கு வீட்டில் அவரது கலை

அவர் அலங்கார கலை மீண்டும் மருத்துவமனைக்கு வீட்டில் இருக்கும்



Sunday, June 23, 2013

தொட்டில் பழக்கம்

நேற்று உடையாத பொம்மை இன்று உடையுமா என்று தொட்டிலில் இருந்த படி யோசனை

இன்றைய கதையிலாவது ராஜா போரில் தோற்றாரா என்ற சிந்தனை

இன்றும் அரிசிக்கலவை  தானா இல்லை அப்பாவுக்கு மதிய உணவுடன் அனுப்பப்படும் சத்தமெழுப்பும் அப்பளத்துண்டை தர அம்மாவுக்கு தைரியம் வருமா என்ற கவலை

முத்தமிடுகையில் குத்தும் அப்பாவின்  மீசையை தவிர்க்க முகத்தை இன்று  எந்த திசையில் திருப்பலாம் என்ற மனக்குழப்பம்

நான் சொன்ன முதல் வார்த்தை 'அம்மா' தான் என்றும் 'அப்பா' தான் என்றும் சண்டையை இன்றைக்கும் தூங்குவதைப்போல் நடித்தால் கேட்டு மகிழமுடியுமா?


இப்படி பழக்கப்படுத்திவிட்டு

இன்று ஞாயிறு ஆயிற்றே பேருந்து வருமோ வராதோ சம்பளத்தில் பிடித்துவிடுவானோ என்று கவலைப்பட கற்றுக்கொடுத்தது தான் யார்?



Thursday, April 12, 2012

அமுதா

கன்னத்தில் முத்தமிட்டால்: நெஞ்சைத்தொடும் திரைப்படம். ஓரளவுக்கு வயதானதிலிருந்தே பெண் குழந்தை ஒன்றை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. அமுதா என்னை பாதித்ததைப்போல் யாரும் இதுவரை என்னை சிந்தனையில் ஆழ்த்தியதில்லை. சிரிக்க வைத்திருக்கிறாள் அழ வைத்திருக்கிறாள். யோசிக்கவைத்திருக்கிறாள். சினிமாத்தனமாக இருக்காலாம், ஆனால் பல நாட்கள் மழை தூறும் வேளையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து உப்புக்கண்ணீரின்  சுவடு பதிந்த கன்னத்தோடு நான் யோசிப்பது, யோசித்து முகம் மலர்வது , அவளைப்போல் ஒரு குழந்தை எனக்கென்று, பிறந்து, வளர்ந்து "அப்பா" என்று என்னிடம் ஓடி வந்து...

..கன்னத்தில் முத்தமிட்டால்.

***********

அந்தி வானத்தில் சூரியன் உறங்கச் சென்றுகொண்டிருந்தான். கிழக்கில் அதை பிரதிபலிக்குமாறு செக்கச்ச்சவேல் என்று இருந்த உள்ளங்காலை மேல் நோக்கி வைத்தவாறு படுத்துக்கொண்டிருந்தாள்  அமுதா.

பாகிரதன் தவம் செய்து கங்கா தேவியை பூமிக்கு அழைத்து வந்தானாம். அவளின் வேகம் தாங்க முடியாது என்று புரிந்து கொண்டு சிவபெருமானை வணங்கி உதவுமாறு கேட்டானாம். அவரும் அவனுக்கு உதவியாக பூமிக்கு வந்து கங்கையை தலையில் தாங்கி நிலத்தில் விட்டார். கட்டுக்கு அடங்காத வேகத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடி, மலை காடு செடி கொடி எல்லாம் தாண்டி கடலை அடைந்தாள் கங்கை. அதைப்போலவே குவித்திருந்த கன்னத்தில் மேலும் கீழும் உமிழ்நீரா கண்ணீரா  என்ற பாகுபாடு இல்லாமல் ஓடியவாறே இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது கும்பகர்ணனுக்கு சவால் விடுவேன் நான் என்று சொல்வது போல தூங்கிக்கொண்டிருந்தாள் அமுதா. 

அமுதா பிறந்து நான்கே நாட்கள் ஆகியிருந்தது. 

அவள் படுத்துக்கொண்டிருக்க, அறைக்குள் மூன்று பேர் நுழைந்தார்கள். 

கை கோர்த்த வண்ணம் இருவர். முகத்தில் போலிப்புன்னகயோடு ஒருத்தி.

சில நிமிடங்கள் அமைதியாக கடந்தது. கை கோர்த்துக்கொண்டிருந்த இருவரையும் தனியே விட்டுவிட்டு அடுத்தவள் வெளியே சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அமுதாவை பார்த்தனர். 

"அமுதா", என்றாள் அந்த பெண்.

அன்றிலிருந்து புது வாழ்வு. அமுதாவுக்கும், அந்த இருவருக்கும்.

அமுதா உறக்கம் கலைந்து பசியில் அழுதாள். 

நாட்டின் மறுமூலையில்  எங்கேயோ சாப்பிட்டுகொண்டிருந்தவளுக்கு  விக்கியது. 

************

பி.கு: படத்தில் வந்த அமுதாவை மனதில் வைத்து எழுதியது தான் இது. மன திறுப்த்திக்காக எழுதுவது. உங்கள் நேரத்தை வீனடித்திருந்தால் மன்னிக்கவும்.

Friday, December 30, 2011

ஆரபி

"சத்தியமா சொல்றேன்டா அதே பொண்ணு தான். இந்த தரம் சீக்ரமாவே கண்டுபுடிச்சுட்டேன் அவ இருந்த கோச்ச. நான் ஏன் பொய் சொல்ல போறேன்?"

"என்னவோ சொல்றடா மகேஷா. எவ பின்னாடியோ சுத்திண்டு அப்பா பணத்த வீணடிக்காத. நா சொல்றத சொல்லிட்டேன் இதுக்கப்பறம் ஒன்னோட இஷ்டம்"

"என்னடா இப்படி எல்லாம் சொல்லற. யார் கேட்டாலும் சாய் தான் எனக்கு தோஸ்து-னு சொல்ற என்கிட்ட போயி எப்படியோ போங்க்றியே?"

"ஆரம்பிக்காதடா  ஒன்னோட புராணத்த. என்ன பண்ணனும் நான் ஒனக்கு?" 

"எதுவும் வேண்டாம். நான் சொல்றத கேட்டுண்டு பொறுத்துக்கோ. இத எல்லாம் ஷேர் பண்ணிக்க நேக்கு யார்டா இருக்கா இந்த ஊர்ல?"

"பேசாத படுடா. லேட்டா போனா அந்த எகனாமிக்ஸ் வாத்தியார் கடன்காரன் வெய்வான் கம்மனாட்டி னு எல்லா பொண்ணுங்க முன்னாடியும். நாளைக்கு சாயங்காலம் பேசிக்கலாம். தூங்கு"

சொல்லிவிட்டு தூங்கிவிட்டான் சாய். மகேஷ் தூக்கம் இழந்து ஒரு வாரம் ஆனது. 

"நாளைக்கு அவ பேரயாவுது கண்டு புடிக்கணும்" நினைத்துகொண்டே கடந்த ஆறு நாட்களின் நிகழ்வுகளை மனத்திரையில் ஓட்டிப்பார்தான் 

முதல் முறை அவன் அவளை பார்த்தது தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் தான். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்-இல் பாதி நடந்தது. அண்ணல் நோக்கினான் நோக்கினான் நோக்கினான்.

கடலும் ஆறும் ஒன்றோடோன்று பிணைகின்ற இடத்தில் நீர் இருக்குமே ஒரு கருநீல வண்ணத்தில், அந்த நிறத்தில் ஒரு புடவை. ரயில் பெட்டியில் உள்ள கைப்பிடிக்கு இணை குடுத்து அவள் காதில் உள்ள தோடுகள் ஆட, அவன் கண்ணிற்கு மட்டுமே பட்டிருக்க வேண்டுமே என்று தெரிந்த தெய்வத்தஎல்லாம் கூப்பிட வைத்தாள். ஆஞ்சநேயர் ஐயப்பன் உட்பட .

முதல் நாள் இப்படியே சென்றது. மாம்பலத்தில் இறங்கி விட்டாள் அவள். கூடவே அவன் மனமும் கால் முளைத்து ஓடிச்சென்று அவள் வலதுகையின் சிறு விரலை பிடித்துக்கொண்டது.

அடுத்தநாள் அதே ரயில். இளஞ்சிவப்பு நிற புடவை. அருகில் சென்று முகத்தை இன்னும் தெளிவாக பார்க்கலாம் என்று தைரியத்தை வரவைத்துக்கொண்டு அவளுக்கு ஒரு மூன்றடி தள்ளி நின்றான். 

கையில் இருந்த ரேடியோவிலிருந்து மகாராஜபுரம் நாகராஜன்  "ஜூதமுராரே" பாடுவது  கேட்டது அவனுக்கு. "சாயங்காலம் நாமளும் ஒரு காசெட்டு வாங்கணும்" என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்.

இப்படியே நான்கு நாட்கள் கழிந்தது. 

ஐந்தாவது நாள். பேசியே தீர வேண்டும் என்ற முடிவுடன் காலையில் கோவிலுக்கெல்லாம் சென்றுவிட்டு கிளம்பினான். 

கண்ணுக்கு இதம் தரும் கிளிப்பச்சையில் புடவை ஒன்று அணிந்திருந்தாள். "இவ்வளவு அழகு ஒருத்திக்கு ஆகாதும்மா" என்ற பிரம்மிப்புடன் நடந்தான் அவளை நோக்கி. 

இன்று பாலமுரளிகிருஷ்ணாவின் "தீன தயாலோ". கண்ணை மூடி ரசித்து கொண்டிருந்தாள். இவனும் பாட்டு முடிந்தவுடன் பேசிடலாம் என்று காத்துக்கொண்டேஇருந்தான். மீனம்பாக்கம் தொடங்கி சைதாபேட்டை வரை இழுத்துக்கொண்டே இருந்தார் பாலமுரளி. 

"அப்பாடா. ஒரு வழியா முடிஞ்சுது" என்று எண்ணிக்கொண்டே "எக்ச்குஸ் மீ?" என்றான்.

"அட மகேஷா !! சௌக்கியமா டா? எட்டாவதுல பாத்தது. எவளோ மாறிட்ட டா நீ! மீச எல்லாம் மொளச்சுடுத்து. ஞாமகம் இருக்கோல்லியோ என்ன? சாம்பு மாமா பையன் டா. சக்கரபாணி. எறங்கு கீழ. கோமதி சங்கர் ல காராமணி மிச்சர் சுட சுட போட்டுருப்பான். வா போயி சாப்டுண்டே பேசலாம். ஆறு வருஷ கதை பாக்கி இருக்கு பேச!"

"பூஜைல கரடி மாறி நோழஞ்சுட்டு காராமணி கேக்கறது பார் பக்கி" என்று சபித்துக்கொண்டே "கூடவே டிகிரி  காப்பியும் " என்று சக்கரபாணி சொன்னதை காதில் வாங்கிக்கொண்டே இறங்கினான்.

ஆறாவது நாள் தூக்கம் போச்சு.

ஏழாம் நாள். "இன்னிக்கு அவ பெயராவது  கேட்டுடுவேன்" என்று சாயிடம் சபதம் போடாத குறை. சொல்லிவிட்டு கிளம்பினான்.

அதே ரயில். சவுக்காரம் விளம்பரத்தில் வர அளவுக்கு வெண்மையான நிறத்தில் ஒரு புடவை, கருப்பு பூக்களுடன். "சினிமாக்காரியா இருந்தா அப்பா ஒத்துப்பாளா?" என்ற கவலையெல்லாம் வரத்தொடங்கியது அவனுக்கு.

அருகில் தோழி போலும். "இன்னிக்கும் முடியாதோ என்று கவலையோடு அவளை நோக்கி பார்த்தான். அவளும் நோக்கினாள்"

பாம்பே ஜெயஸ்ரீயின் "ஸ்ரீ சரஸ்வதி"  ஒலித்தது ரேடியோவிலிருந்து.

விரல்களால் ஏதோ சேதி சொன்னாள் அவள் தோழியிடம்.

"இந்தாங்க இத படிங்க" என்று மடித்த காகிதம் ஒன்றை கொடுத்தாள் அவள் தோழி.

"ஆறு நாளா ஒரே ராகத்துல பாட்டு கேட்டுண்டு இருக்கேனே. இன்னுமா புரியலை? அசடு.!" என்று ஆரம்பித்தது அந்த கடிதம்.

அவள் பெயர் ஆரபி.

Friday, August 26, 2011

கிறுக்கல்கள்-2

காதல், வெட்கம் மற்றும் சில கவிதைக்கு அப்பாற்பட்ட  காரணங்கள்.

கையில் பட்டாம்பூச்சி வண்ணமாய்,
கடற்கரை மண்ணில்  காலடியாய்,
நெஞ்சில் உந்தன் முகம்
சுவடு வைத்து போனதடி.

சென்னை நகரில்,
கோடை கால குழாவைப்போல்,
உன்னை பார்க்கையில் , தாய் மொழியும் மறந்ததடி.

இருட்டிலும் பளிச்சிடும் பற்கள்,
வேலி போட்ட மல்லிகையடி.

ஆணுக்கு நானும்
பெண்ணுக்கு நீயும்
காதலுக்கு நாமும் உவமயடி.

இதுவரை நான் படித்த
கவிதைகளுக்கு அர்த்தம் புரிய வைத்து,
இனி நான் எழுதும் கவிதைகளுக்கு அர்த்தமாய் போனாயடி.

இரவில் நீ குழந்தைக்கு சோறூட்டும் அழகைக்கண்டு
மேகத்தினுள் மறைந்து,
வெண்ணிலவும் வெட்கப்படதடி.

கவித்துவம் 

காதோரம் கருமயிர் காற்றடித்து
கன்னத்தில்விழ
கைவிரலால் களைந்து
கண்சிமிட்டும் கவின்காட்சியை
காணக் கண் கோடிவேண்டும்.

வெள்ளைப்பொய்


வேறொருத்திக்கு நான் எழுதிய கவிதையை படித்து
என் கன்னத்தில் குழி விழுமா? என்றாய்.
ஆம், என்று சொல்லி உன்னை சிரிக்கவைத்து 
தேடினேன்.

உன் கன்னத்தில்.. குழி.



Saturday, July 2, 2011

தமிழ் இனி மெல்லச்சாகும்.

புதிய நண்பர்களிடம், பழக ஆரமித்த சில நாட்களில் "தமிழ் படிக்க தெரியுமா?" என்று நான் கேட்பதுண்டு. பலரும் 'இல்லை' என்ற பதிலையே தருவார்கள். மற்றவர்கள் எழுத்து கூட்டி படிக்க நேரம் ஆகிறது. பேச தெரியும் ஆனா பள்ளியில் பிரெஞ்சு படிச்சேன் சமஸ்க்ரிதம் படிச்சேன் என்றெல்லாம் கூறுவது உண்டு. வேறு மொழி தெரிந்து கொள்வதில் தவறில்லை அதுக்காக தமிழ் நாட்டில் பிறந்து, வீட்டில் தமிழ் பேசி வளர்ந்துவிட்டு தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னால் வருத்தபடதான் முடிகின்றது என்னால்.


இன்றைய கட்டத்தில் நம்மில் யாரும் தமிழ் படிப்பதும் இல்லை, தமிழ் படிப்பதும் இல்லை. பல காரணங்கள் சொல்லலாம். அரசாங்கம் மிகச்சிறப்பாக தமிழ் வளர்க்கிறது. சோகம் என்னவென்றால் அது டில்லியில் மட்டுமே. சட்ட சபையில் சட்டை அவிழாமல் இருக்க தமிழைப்பற்றி பக்கம் பக்கமாக பேசுகின்றனர். நம்மூரில் தமிழ் மாநாடு என்று ஒன்றை நடத்தினார்கள். ரகுமான் இசை அமைத்த பாடலெல்லாம் வெளியிட்டார்கள். அரசாங்கம் மாறியது, முதல் குறிக்கோளாக அந்த மாநாட்டை மக்கள் மறக்க வேண்டும் என்பதைக்கொண்டு அதை பற்றி புத்தகத்தில்கூட இல்லாதவாறு செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெற்றி தமிழக அரசுக்கு. தோல்வி தமிழுக்கு.


"என்னடா இவன் பெரிய திருவள்ளுவன் மாதிரி  தமிழ் தொண்டு பத்தி பேசறானே தமிழ் பாடத்தை எடுத்து படிக்க வேண்டியது தான?" என்று நீங்கள் கேட்பது வாஸ்தவம் தான். வயத்து பொழப்புன்னு ஒன்னு இருக்கே! தமிழை பாடமாக எடுத்து படிக்காவிட்டாலும் பொழுது போக்கிற்காக தமிழ் படிக்கலாமே? 
அனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. 


விழுக்காடு- என்ன அருமையான வார்த்தை. இந்த ஒரு வார்த்தை சொல்லிவிடும் ஒன்னாம் பகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரு மாணவன் எதற்காக வாழ்கையை செலவிடுகிறான் என்பதை. விழுக்காடு விழுக்காடு என்று மதிப்பென்னுக்க்காகவே வாழ்ந்து பாடம் படிக்கிறான். வாழ்க்கைப்பாடம் நடத்தும் தேர்வில் தோற்றுவிடுகிறான். பள்ளிக்கு பின் விழும் காட்டை தான் விழுக்காடு என்ற வார்த்தை அறிவுருத்துகிறதோ என்னவோ.


எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற விதி கொண்டுவந்தார்கள்  அதையும் ஒழுங்க செஞ்சாங்களா? இல்ல. வள்ளுவனும் தொல்காப்பியரும் எழுதின பாடல்களுக்கு நடுவே "ஒவ்வொரு பூக்களுமே" னு சினிமா பாட்டு. அதுல இலக்கணமும்  தப்பு. கவிச்சுதந்திரம் னு மழுப்பிடுவாங்க. எட்டாவது படிக்கர பையனுக்கு தெரியுமா அதெல்லாம்? யோசனை என்பதையே மறந்தாச்சு.


கலப்புத்தமிழ் உணர்ந்து  திருத்தம் செய்க னு ஒரு பகுதி. ரெண்டு மார்க் வாங்கலாம். ரெண்டு மார்க் தான னு படிக்க முயற்சி கூட  செய்வதில்லை ஒருத்தனும். இப்படி இருந்தா தமிழ் எங்க வளரும்? 


தமிழ் பாடல்களில் தமிழை விட ஆங்கிலம் அதிகமாக உள்ளது. வயலின் னு ஒரு இசைக்கருவிய மறந்தே போயாச்சு. ஒன்னு குத்து பாட்டு இல்ல மேற்கத்திய இசை. கவிதை என்பது வேற ஒருவன் காதலிக்காக வடை மடிச்ச குமுதம் பேப்பர்ல பாத்து  சொல்றதோட முடிஞ்சு போச்சு. தமிழ் செய்தித்தாள் வாசிப்பது அவமானமாம். இதெல்லாம் யார் வளத்து விடறாங்கனு தெரியலை.


தெரிஞ்சே தான் சொன்னாங்க போல இருக்கு 

தமிழ் இனி மெல்லச்சாகும்.

Monday, April 4, 2011

13-ஆம் நம்பர் வீடு

அது மார்கழி மாதம். காலை பனி கூட கலையவில்லை. தெருமுனையில் நின்று எதையோ தேடிகொண்டிருந்தான். குளிரில்  அவனுடைய கை காலெல்லாம் உதறிக்கொண்டிருந்தது. மெதுவாக தெருவுக்குள் நுழைந்தான். இதுவரை அவன் பார்த்த வீடுகளிலெல்லாம் மார்கழி மாதத்தில் கலர் கலராக கோலமிட்டிருக்கும். இந்த தெரு அவனுக்கு புதிர் போட்டது. எந்த வீட்டிலும் மனித சாயலே இல்லை. தெருவை அடைக்க வேண்டும் என்பதற்காகவே வீடு கட்டியிருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டான். அரை இருட்டில் அந்த தெருவுக்குள் அவன் நுழைய, அடி வயிற்றில் ஏதோ செய்தது அவனுக்கு. மெதுவாக நடந்தான். பனிக்காற்று எச்சரிக்கும் விதமாக எதிர் திசையில் அழுத்தியது. மூன்று வீடுகளை கடந்தோம் என்று விரல் விட்டு எண்ணினான். நான்காம் வீடு மூன்றிலிருந்து குறிப்பிடத்தக்க தூரத்தில் இருந்தது. நடுவே வெத்து நிலம். நேற்றிரவு மழை பெய்து ஓய்ந்ததை தேங்கிக்கடந்த தண்ணியை பார்த்து தெரிந்து கொண்டான். நாய் ஒன்று சத்தமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தது. எழுந்துவிடுமோ என்று பயந்து வேகமாக நடந்தான். சிறு வயதில் நாய் துரத்தியது ஞாபகம்  வந்தது அவனுக்கு. நடப்பதை தொடர்ந்தான். 7-ஆம் நம்பர் வீட்டு  வாசலில் ஊஞ்சல் ஒன்று ஆளில்லாமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. பின்னாடி திரும்பி நாய் பின் தொடர்ந்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டான். தொடர்ந்து நடந்தான். பத்து, பதினொன்னு, பன்னெண்டு, வாய் விட்டு எண்ணிக்கொண்டே வந்தான். பதினாலு. பதின்மூன்ரைக் காணவில்லை. சுற்று முற்றும் பார்த்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை. காற்றில் ஏதோ அசையும் சத்தம் கேட்டது. எதிரே உள்ள காலி இடத்தில் இடி தாக்கிய மரமொன்று துணை தேடி நின்று கொண்டிருந்தது அவனைப்போலவே. திடீரென்று ஒரு கை அவன் பின்தோளில் கை வைத்தது. சடார் என்று திரும்பினான். 




அவன் இடுப்பு உசரத்தில் ஒரு கிழவர். 
திக்கி திக்கி, "பதிமூனா நம்பர் வீடு..." என்றான். "நீ தான் அந்த புது பயலா? கொண்டா" என்று கையில் இருந்த செய்தித்தாளை வாங்கிக்கொண்டு மறு வார்த்தை பேசாமல் சென்றார்,எதிரே இருந்த வெத்து நிலத்தில் ஓரமாக ஒரு ஓலை குடிசைக்குள்.
மனதில் அடையாளம் குறித்துக்கொண்டான்,  பதின்மூன்றாம் நம்பர் வீடு.    

Saturday, January 1, 2011

கிறுக்கல்கள்

தமிழ் கவிதை கைக்குழந்தைப்போன்றது
எவன் வரைந்தாலும் படிக்க இனிமையாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் காரணத்தாலேயே நானும் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ கவிதை எழுத முனைகிறேன்

பல மோசமான, மொக்கையான கவிதைகளுக்கு இடையே சில வரிகள் திரும்பப்படிக்கும் அளவுக்கு அழகாய் அமைந்து விடுகின்றன.இருட்டில் தான் வெளிச்சத்தின் அருமை புலப்படும் அல்லவா? எனவே  அவ்வாறான உளறல்களும் அழகான சில கிறுக்கல்களும்
இங்கே

மெகா சீரியல்


தொலைக்கட்சியில் அவளுக்கு சுகப்ப்ரசவமானதா
என்று நகம் கடித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்,
தொட்டிலில் குழந்தை அழுது கொண்டிருந்தது

விதி

ஜாதிக்கலவரத்தில் மூவர் மரணம்,
சந்நிதி தெருவில் காவல் அதிகரிப்பு

பார்த்திபன் கனவு

பட்டம் வாங்கிக்கொண்டிருக்கும் மகனின் கனவை கலைத்தது
"விடிஞ்சாச்சுடா வயலுக்கு போ" என்ற தாயின் குரல்

வாழ்கை 

கீழே விழுந்த முறுக்கை எடுக்காதே என்றாள் மகனிடம்
அவளுக்கும் தெரிந்திருந்தது போலும்
மூன்றடி தள்ளி நடந்து வரும் பிச்சைக்காரனின் கடைசி மகனுக்கு
முருக்கென்றால் உயிர் என்று.

எதிர்காலம்

பச்சையாக இருப்பது வயல்,
அருகில் ஓடுவதுதான் ஆறு.
மகனுக்கு புத்தகம் பார்த்து கற்றுக்கொடுத்தான்
வருடம் 2050௦.

கருப்பு

கருப்பு, ஆகாத வண்ணமாம்
குருடனுக்கும் விளங்குவதாலோ?

தானம்

வலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதாம்
ஒரு கை உள்ளவனெல்லாம் தானம் வாங்குபவனாகவே  உள்ளான்

படிப்பு

தேர்வுக்கு படிக்கவேண்டும் ஆறு மணிக்கு எழுப்பு
என்று ஆறு வயது வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு உறங்க சென்றான்

மேதாவி

இலக்கியம் படித்த தமிழாசிரியர்
இலக்கணம் சொல்லிகொண்டிருந்தார்
எடுத்துக்காட்டாக, விவசாயியின் நாட்டுப்புறப்பாடல்.

முத்தம்

ஒரே மூச்சில் அவன் காதலுக்கு பதில் கூறினாள்,
முதல் முத்தம்.

பிரிவு

சேர முடியாமல் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின்
கதை பேசிக்கொண்டிருந்தன
சேரவே முடியாத தண்டவாளங்கள்

பக்தி

நீ கோவிலுக்குப்போகும் அந்த அரை மணி
நாத்திகனும் ஆத்திகன் ஆவான்.

Thursday, December 16, 2010

சித்திரமும் கைப்பழக்கம்..

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

காலைப்பனி, கதிரவன்
குளிர்காற்று, குருவிச்சத்தம்
இவற்ற்றை ரசிக்க
அதிகாலை எழுதல் பழகு.

எதுகை மோனை
காதல் கோபம்
இவற்ற்றை ரசிக்க
தமிழ் படித்தல் பழகு.

கடல் கடந்து சென்றாலும்
பெயர் நிலை நிருட்ட
தமிழில் புரிந்து
பல மொழி பழகு.

மரமும் கொடியும்
அழகாய் தெரியும்
நாட்களை ரசிக்க
காதல் பழகு.

வீரம் காட்ட
குரோதம் நீக்க
ஆழ் மனம் அடங்க
ரௌத்திரம் பழகு.

எல்லா கேள்விக்கும்
விடை ஒருவன் அறிவான்
என்று நம்பி
ஆத்திகம் பழகு.

அத்தனை பதிலயும்
அப்படியே நம்பாமல்
ஆழ்ந்து யோசிக்க
நாத்திகம் பழகு.

எல்லா நிலையிலும்
உனக்கு மேல் ஒருவன்
இருப்பதை எண்ணி
அடக்கம் பழகு.

உன்னிடம் இருப்பது
உழைப்பால் வந்ததாயின்
உரிமை கொண்டாடி
ஆணவம் பழகு.

 பத்து வயதில்
எனக்கேன் இதெல்லாம்?
பதினெட்டில் புரிந்தது
சித்திரமும் கைப்பழக்கம்.

Saturday, August 28, 2010

பினாத்தல்கள்

 எப்போதும் நினைத்ததுண்டு தமிழில் எழுத வேண்டும் என்று.. வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்று பார்த்த கமலஹாசன் திரைப்படம் ஒன்று தமிழில் எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அன்பே சிவம் என்று கூறி எழுத தொடங்குகிறேன் படிப்பவர்கள் மன்னிக்கவும்,நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாவது நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று முற்படுகிறேன்.




வகுப்பறையில் இன்று அதிகம் பேசிவிட்டேனோ என்ற எண்ணம் சில மணி நேரமாக உருத்திகொண்டிருகிறது.ஏனோ தெரியவில்லை புது இடமோ பழைய இடமோ நான் நானாகவே இருந்து விடுகிறேன்.சில நேரங்களில் பலனளித்தாலும் பல சமயம் எனக்கும் பிறர்க்கும் இடையூறாகவே  முடிந்து விடுகிறது.விளைவு இன்று நான் இங்கு பொலம்புவது.


பேச்சைக்குறை
பிறரை பேச விடு 
காதை கூர்மைப்படுத்து
அமைதி காத்தலைக் கடை பிடி


அந்த சில மணி நேரத்தில் கற்ற பாடங்கள் இவை


நண்பர்கள் என்றாலே எனக்கு இருக்கும் 3   பேரே நினைவுக்கு வருகிறார்கள்.அது இன்றும் என்றும் நிலைக்க வேண்டும்.நிலைக்கும்.புது இடம் புகுந்து சில நாட்களே ஆகிறது.இருப்பு கொள்ள வில்லை எனக்கு.சில நேரங்களில் எதுவும் வித்யாசபடவில்லை மற்ற நேரத்தில் எண்ணமோ குறை நெஞ்சை குடைகிறது


நண்பர்களைத் தேடாதே நல்ல நட்பைத் தேடு
தனிமையில் அறிவாய்  உன்னை நீயே


இசை எப்போதுமே துணை போகிறது.எல்லா நேரத்திற்கும் உகுந்த பாடல்களை எவனோ  ஒருவன்  எழுதிவிட்டு செல்கிறான்.


Facebook -உம வர வர பொழுது போக்க உதவ நிறுத்திவிட்டது.எனக்கும் தினசரி எழுத வேண்டும் என்று ஆசை தான்.எல்லா வற்றையும் விட எழுதுவதில் எண்ணமோ ஒரு சொட்டு மகிழ்ச்சி கூடவே எழுகிறது.ஆசை உண்டு எழுத வார்த்தைகள் வர மறுக்கிறது.அதுவும் நல்லதுதான் உங்களுக்கு ;)


கோவம்  வருகிறது.என் மேல்,சுற்றி இருப்பவர்கள் மேல்,இவர்கள் ஏன் இருக்கவேண்டும் என்று.இல்லாதவர்கள் மேல்,ஏன் இவர்கள் இல்லாமல் போகிறார்கள் என்று.


ஏனோ ஒரு நாள் விடுமுறை விட்டதன் பழி தீர்பதற்காக ,நான்கு நாட்களாக வெயில் பழி தீர்கிறது.வெயில் பேரை சொல்லி விடுமுறை விட்டால் கோவம் தீருமோ என்னவோ.


சில வகுப்புகளில் ஏன் தான் உட்கார்திருகோம் என்று தோன்றும்.கோவம் வரும்.படிப்பில் விளையாடுகிறார்களே என்று தோன்றும்.ஆசிரியப்பணி புனிதமானதல்லவோ? 
கேள்வி கேட்க ஆள் இல்லை.கல்லூரி என்றால் ஆசிரியர்கள் இப்படித்தான் என்று அமைந்து விட்டது மாற்றம்  வர வாய்ப்பும் இல்லாமல் போனது.இந்த நிலையிலும் சில ஆசிரியர்கள் உயிரை கொடுத்து பாடம் கற்பிக்கிறார்கள்.தலை வணங்க வேண்டியவர்கள் அவர்கள்


செய்திகள் பார்ப்பதை முற்றும் நிறுத்தி விட்டேன்.
ஏனோ அரசியலில் ஆர்வம் சற்றும் இல்லை
ஏமாற்றும் அரசியல்வாதிகள் 
ஏமாறும் மக்கள்
மாறப்போவதில்லை நாடு.


எல்லா பாடங்களையும் விட வாழ்கை பாடமே எனக்கு மிகவும் பிடித்ததாகவும் அடிக்கடி பேசப்படும் தலைப்பாகவும் இருந்து வருகிறது.ஏனோ எனக்கு நானே அறிவுரை கூறிக்கொள்வது  மிகவும் பிடித்தமான ஒரு வேலையாக உள்ளது
எழுதிவிட்டு நானே படித்து தோளில்  தட்டிக்கொள்வேன்.


புத்தகங்கள்,என்றும் எப்போதும் என்னுடன் வரக்கூடிய அறிவுச்செல்வம்
ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் படிக்கிறேன்.செலவிட நேரமும்  பணமும் அளவாக இருப்பதனால்.


சிறு குழந்தை ஒன்றை பேருந்தில் பார்த்தேன்.என்னை அறியாமல் சிரித்த தருணம்.பொக்கிஷம்.என்னுடைய நாள் முற்று பெற்றது.


தந்தையின் காதோரம் கதை சொல்லிக்கொண்டே வந்தது.நான் இறங்கும் வரையில் இறங்கிவிடதே என்று எண்ணிக்கொண்டே பயணித்தேன்.ஆசை நிறைவேறியது.


இன்றும் அதே இடத்தில் அதே பிச்சைக்காரன்.மற்றம் மானிடத்தத்துவம்   இல்லையோ?


எண்ணங்கள் பாய்கின்றன.ஒரு கோர்வையான பதிப்பு வந்துவிட்டதா  என்று படித்து பார்கிறேன்.பாதியில் நிறுத்தி,என்னுடைய ஆசைக்காக  எழுதுவது.எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம்.


என்னை விட வயதில் பெரியவர்களுடன் அதிகம் நேரம் செலவிடுகிறேன்.அதனாலோ என்னவோ மெதுவாக உலகம் சுற்றுவது போல எண்ணம் எனக்கு.


எதோ ஒன்று குறைகிறது.ஏன் என்று சொல்ல வார்த்தை வர வில்லை.
எழுத நினைத்தேன்.எழுதி விட்டேன்.
ஆசை,பேராசை.நிறை வேறியது.


பற்பல எண்ணங்கள்.
நல்ல நாள்.
கொஞ்சம் மோசமான நாள்.
பல நிறங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும்.
நாளை ஞாயிறு.எழுதுகையிலே முகத்தில் மலர்ச்சி.
நாள் நிறைவுக்கு வருகிறது. 


இதுவும் கடந்து போகும்.