Sunday, January 8, 2012

பையனுக்கு பாட தெரியுமா?

"ஒங்க பையன் என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கறான் பாருங்கோ!"

"ஆமான்டி, கணக்குல நூறு வாங்கினா ஓம்புள்ள. பிரச்சனணு வந்தா எம்புள்ள. ஏன்டா ஹரிஹரா, என்னத்த பண்ணிட்டு வந்துருக்க? மறுபடியும் அந்த veena போனவன் கண்ணாடில கிரிக்கெட் பால் அடிச்சியா? "

"என்னண்ணா நீங்க! வெவஸ்தகெட்டதனமா பேசிண்டு! லவ் பண்ணிட்டு வந்து நிக்கறான்!"

"ஹாஹா. வயசு பையன் லவ் பண்ணலைனா தாண்டி பிரச்சனை."

"லவ் பண்றது தப்புன்னு சொல்லலை! யார லவ் பண்றான்னு கேளுங்கோ. நாராயணா!"

**********

"ஏன்டி பேய் அரன்ஜாப்ல இருக்க?"

"பின்ன எப்படி இருக்கரதாம்? சாயங்காலம் அவன் சொன்னதெல்லாம் கேட்டேளா இல்லியா? நாலு அற வெச்சு புத்தி சொல்லாம, அம்மாவ நான் பாத்துகறேன்னு தைரியம் சொல்றேள் அவனுக்கு. மற கழண்டுடுத்தா?"

"என்னடி பண்றது? அவனா வந்து சொன்னானேன்னு  திருப்தி பட்டுக்கோ. காலம் மாறிடுத்து. நம்ம பையன். நாம தான புரிஞ்சுண்டு போகணும்?"

"அதுக்காக இதெல்லாம் எப்படிண்ணா? ஆத்துல மத்தவா கேள்வி கேப்பாளே. அவாளுக்கு என்ன பதில் சொல்றது?"

"தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வந்துட்டு போறவனவிட என்னோட பையன் தாண்டி எனக்கு முக்கியம். எவன் கேள்வி கேக்கறான்னு  பாக்கறேன்"

"நீங்களாச்சு ஒங்க புள்ளயாச்சு. எக்கேடோ கெட்டு போங்கோ."

**********

"வெள்ளிக்கழமை நல்ல நாள். அவா ஆத்துக்கு போயி பேசிட்டு வந்துடுவோம். ஹரிஹரா, அவா ஆத்துல விஷயம் தெரியுமா இல்ல நாங்க போன் பண்ணி சொல்லனுமா?"

"தெரியும் பா. ஒரு நிமிஷம் பா. வேற குடும்பத்தல பொறந்துருந்தா என்ன அடிச்சு ஒதைச்சு அமக்களம் பண்ணிருப்பா. குடுத்து வெச்சுருக்கேன்  நான். மன்னிச்சுடுங்கோ பா."

"என்னடா மன்னிப்பெல்லாம். எம்பையன் சந்தோஷம்தாண்டா எனக்கும் சந்தோஷம்"

**********

"வணக்கம். நான் வரதாச்சாரி, ரிடயர்டு மாஜிஸ்ட்ரேட். ஹரிஹரனோட அப்பா. விஷயத்த பையன் சொன்னான். இவளுக்கு தான் நேரம் ஆச்சு ஒத்துக்கறத்துக்கு.  பசங்க சந்தோஷம் தான முக்கியம். என்ன சொல்றேள்? கல்யாணத்த சீக்ரமாவே முடிச்சுடலாம். சம்மதம் தான?"

"என் பேர் கல்யாணசுந்தரம். ஏஜிஎஸ்ல இருந்தேன். நானும் ரிடயர்டு தான். நீங்க சொல்றது சரி தான். பசங்க சந்தோஷம் தான் முக்கியம்."

"ஏன்டா ஹரிஹரா. என்னடா சொல்றா ஒங்கம்மா?"

"அவன என்ன கேக்கறேள்? ஆமாம், பையனுக்கு பாட தெரியுமா?" என்றாள் ஹரிஹரனின் அம்மா.

"கணேஷ் நன்னா பாடுவான். ஏழு வருஷம்  சங்கீதம் படிச்சான். ஹரிஹரனுக்கு சமையல் வருமா?" எனறாள் கணேஷின் அம்மா.

"பேஷா சமைப்பான். என் கைப்பக்குவம் அப்படியே வரும் அவனுக்கு."

**********

கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்து முடிஞ்சுது. ஒரே வருஷத்துல பெண் கொழந்த ஒருத்திய கணேஷும் ஹரிஹரனும் தத்து எடுத்துண்டு சந்தோஷமா வாழ்ந்துண்டு இருக்கா