Showing posts with label பினாத்தல்கள். Show all posts
Showing posts with label பினாத்தல்கள். Show all posts

Sunday, June 23, 2013

தொட்டில் பழக்கம்

நேற்று உடையாத பொம்மை இன்று உடையுமா என்று தொட்டிலில் இருந்த படி யோசனை

இன்றைய கதையிலாவது ராஜா போரில் தோற்றாரா என்ற சிந்தனை

இன்றும் அரிசிக்கலவை  தானா இல்லை அப்பாவுக்கு மதிய உணவுடன் அனுப்பப்படும் சத்தமெழுப்பும் அப்பளத்துண்டை தர அம்மாவுக்கு தைரியம் வருமா என்ற கவலை

முத்தமிடுகையில் குத்தும் அப்பாவின்  மீசையை தவிர்க்க முகத்தை இன்று  எந்த திசையில் திருப்பலாம் என்ற மனக்குழப்பம்

நான் சொன்ன முதல் வார்த்தை 'அம்மா' தான் என்றும் 'அப்பா' தான் என்றும் சண்டையை இன்றைக்கும் தூங்குவதைப்போல் நடித்தால் கேட்டு மகிழமுடியுமா?


இப்படி பழக்கப்படுத்திவிட்டு

இன்று ஞாயிறு ஆயிற்றே பேருந்து வருமோ வராதோ சம்பளத்தில் பிடித்துவிடுவானோ என்று கவலைப்பட கற்றுக்கொடுத்தது தான் யார்?



Thursday, April 12, 2012

அமுதா

கன்னத்தில் முத்தமிட்டால்: நெஞ்சைத்தொடும் திரைப்படம். ஓரளவுக்கு வயதானதிலிருந்தே பெண் குழந்தை ஒன்றை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. அமுதா என்னை பாதித்ததைப்போல் யாரும் இதுவரை என்னை சிந்தனையில் ஆழ்த்தியதில்லை. சிரிக்க வைத்திருக்கிறாள் அழ வைத்திருக்கிறாள். யோசிக்கவைத்திருக்கிறாள். சினிமாத்தனமாக இருக்காலாம், ஆனால் பல நாட்கள் மழை தூறும் வேளையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து உப்புக்கண்ணீரின்  சுவடு பதிந்த கன்னத்தோடு நான் யோசிப்பது, யோசித்து முகம் மலர்வது , அவளைப்போல் ஒரு குழந்தை எனக்கென்று, பிறந்து, வளர்ந்து "அப்பா" என்று என்னிடம் ஓடி வந்து...

..கன்னத்தில் முத்தமிட்டால்.

***********

அந்தி வானத்தில் சூரியன் உறங்கச் சென்றுகொண்டிருந்தான். கிழக்கில் அதை பிரதிபலிக்குமாறு செக்கச்ச்சவேல் என்று இருந்த உள்ளங்காலை மேல் நோக்கி வைத்தவாறு படுத்துக்கொண்டிருந்தாள்  அமுதா.

பாகிரதன் தவம் செய்து கங்கா தேவியை பூமிக்கு அழைத்து வந்தானாம். அவளின் வேகம் தாங்க முடியாது என்று புரிந்து கொண்டு சிவபெருமானை வணங்கி உதவுமாறு கேட்டானாம். அவரும் அவனுக்கு உதவியாக பூமிக்கு வந்து கங்கையை தலையில் தாங்கி நிலத்தில் விட்டார். கட்டுக்கு அடங்காத வேகத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடி, மலை காடு செடி கொடி எல்லாம் தாண்டி கடலை அடைந்தாள் கங்கை. அதைப்போலவே குவித்திருந்த கன்னத்தில் மேலும் கீழும் உமிழ்நீரா கண்ணீரா  என்ற பாகுபாடு இல்லாமல் ஓடியவாறே இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது கும்பகர்ணனுக்கு சவால் விடுவேன் நான் என்று சொல்வது போல தூங்கிக்கொண்டிருந்தாள் அமுதா. 

அமுதா பிறந்து நான்கே நாட்கள் ஆகியிருந்தது. 

அவள் படுத்துக்கொண்டிருக்க, அறைக்குள் மூன்று பேர் நுழைந்தார்கள். 

கை கோர்த்த வண்ணம் இருவர். முகத்தில் போலிப்புன்னகயோடு ஒருத்தி.

சில நிமிடங்கள் அமைதியாக கடந்தது. கை கோர்த்துக்கொண்டிருந்த இருவரையும் தனியே விட்டுவிட்டு அடுத்தவள் வெளியே சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அமுதாவை பார்த்தனர். 

"அமுதா", என்றாள் அந்த பெண்.

அன்றிலிருந்து புது வாழ்வு. அமுதாவுக்கும், அந்த இருவருக்கும்.

அமுதா உறக்கம் கலைந்து பசியில் அழுதாள். 

நாட்டின் மறுமூலையில்  எங்கேயோ சாப்பிட்டுகொண்டிருந்தவளுக்கு  விக்கியது. 

************

பி.கு: படத்தில் வந்த அமுதாவை மனதில் வைத்து எழுதியது தான் இது. மன திறுப்த்திக்காக எழுதுவது. உங்கள் நேரத்தை வீனடித்திருந்தால் மன்னிக்கவும்.

Saturday, July 2, 2011

தமிழ் இனி மெல்லச்சாகும்.

புதிய நண்பர்களிடம், பழக ஆரமித்த சில நாட்களில் "தமிழ் படிக்க தெரியுமா?" என்று நான் கேட்பதுண்டு. பலரும் 'இல்லை' என்ற பதிலையே தருவார்கள். மற்றவர்கள் எழுத்து கூட்டி படிக்க நேரம் ஆகிறது. பேச தெரியும் ஆனா பள்ளியில் பிரெஞ்சு படிச்சேன் சமஸ்க்ரிதம் படிச்சேன் என்றெல்லாம் கூறுவது உண்டு. வேறு மொழி தெரிந்து கொள்வதில் தவறில்லை அதுக்காக தமிழ் நாட்டில் பிறந்து, வீட்டில் தமிழ் பேசி வளர்ந்துவிட்டு தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னால் வருத்தபடதான் முடிகின்றது என்னால்.


இன்றைய கட்டத்தில் நம்மில் யாரும் தமிழ் படிப்பதும் இல்லை, தமிழ் படிப்பதும் இல்லை. பல காரணங்கள் சொல்லலாம். அரசாங்கம் மிகச்சிறப்பாக தமிழ் வளர்க்கிறது. சோகம் என்னவென்றால் அது டில்லியில் மட்டுமே. சட்ட சபையில் சட்டை அவிழாமல் இருக்க தமிழைப்பற்றி பக்கம் பக்கமாக பேசுகின்றனர். நம்மூரில் தமிழ் மாநாடு என்று ஒன்றை நடத்தினார்கள். ரகுமான் இசை அமைத்த பாடலெல்லாம் வெளியிட்டார்கள். அரசாங்கம் மாறியது, முதல் குறிக்கோளாக அந்த மாநாட்டை மக்கள் மறக்க வேண்டும் என்பதைக்கொண்டு அதை பற்றி புத்தகத்தில்கூட இல்லாதவாறு செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெற்றி தமிழக அரசுக்கு. தோல்வி தமிழுக்கு.


"என்னடா இவன் பெரிய திருவள்ளுவன் மாதிரி  தமிழ் தொண்டு பத்தி பேசறானே தமிழ் பாடத்தை எடுத்து படிக்க வேண்டியது தான?" என்று நீங்கள் கேட்பது வாஸ்தவம் தான். வயத்து பொழப்புன்னு ஒன்னு இருக்கே! தமிழை பாடமாக எடுத்து படிக்காவிட்டாலும் பொழுது போக்கிற்காக தமிழ் படிக்கலாமே? 
அனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. 


விழுக்காடு- என்ன அருமையான வார்த்தை. இந்த ஒரு வார்த்தை சொல்லிவிடும் ஒன்னாம் பகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரு மாணவன் எதற்காக வாழ்கையை செலவிடுகிறான் என்பதை. விழுக்காடு விழுக்காடு என்று மதிப்பென்னுக்க்காகவே வாழ்ந்து பாடம் படிக்கிறான். வாழ்க்கைப்பாடம் நடத்தும் தேர்வில் தோற்றுவிடுகிறான். பள்ளிக்கு பின் விழும் காட்டை தான் விழுக்காடு என்ற வார்த்தை அறிவுருத்துகிறதோ என்னவோ.


எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற விதி கொண்டுவந்தார்கள்  அதையும் ஒழுங்க செஞ்சாங்களா? இல்ல. வள்ளுவனும் தொல்காப்பியரும் எழுதின பாடல்களுக்கு நடுவே "ஒவ்வொரு பூக்களுமே" னு சினிமா பாட்டு. அதுல இலக்கணமும்  தப்பு. கவிச்சுதந்திரம் னு மழுப்பிடுவாங்க. எட்டாவது படிக்கர பையனுக்கு தெரியுமா அதெல்லாம்? யோசனை என்பதையே மறந்தாச்சு.


கலப்புத்தமிழ் உணர்ந்து  திருத்தம் செய்க னு ஒரு பகுதி. ரெண்டு மார்க் வாங்கலாம். ரெண்டு மார்க் தான னு படிக்க முயற்சி கூட  செய்வதில்லை ஒருத்தனும். இப்படி இருந்தா தமிழ் எங்க வளரும்? 


தமிழ் பாடல்களில் தமிழை விட ஆங்கிலம் அதிகமாக உள்ளது. வயலின் னு ஒரு இசைக்கருவிய மறந்தே போயாச்சு. ஒன்னு குத்து பாட்டு இல்ல மேற்கத்திய இசை. கவிதை என்பது வேற ஒருவன் காதலிக்காக வடை மடிச்ச குமுதம் பேப்பர்ல பாத்து  சொல்றதோட முடிஞ்சு போச்சு. தமிழ் செய்தித்தாள் வாசிப்பது அவமானமாம். இதெல்லாம் யார் வளத்து விடறாங்கனு தெரியலை.


தெரிஞ்சே தான் சொன்னாங்க போல இருக்கு 

தமிழ் இனி மெல்லச்சாகும்.

Saturday, August 28, 2010

பினாத்தல்கள்

 எப்போதும் நினைத்ததுண்டு தமிழில் எழுத வேண்டும் என்று.. வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்று பார்த்த கமலஹாசன் திரைப்படம் ஒன்று தமிழில் எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அன்பே சிவம் என்று கூறி எழுத தொடங்குகிறேன் படிப்பவர்கள் மன்னிக்கவும்,நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாவது நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று முற்படுகிறேன்.




வகுப்பறையில் இன்று அதிகம் பேசிவிட்டேனோ என்ற எண்ணம் சில மணி நேரமாக உருத்திகொண்டிருகிறது.ஏனோ தெரியவில்லை புது இடமோ பழைய இடமோ நான் நானாகவே இருந்து விடுகிறேன்.சில நேரங்களில் பலனளித்தாலும் பல சமயம் எனக்கும் பிறர்க்கும் இடையூறாகவே  முடிந்து விடுகிறது.விளைவு இன்று நான் இங்கு பொலம்புவது.


பேச்சைக்குறை
பிறரை பேச விடு 
காதை கூர்மைப்படுத்து
அமைதி காத்தலைக் கடை பிடி


அந்த சில மணி நேரத்தில் கற்ற பாடங்கள் இவை


நண்பர்கள் என்றாலே எனக்கு இருக்கும் 3   பேரே நினைவுக்கு வருகிறார்கள்.அது இன்றும் என்றும் நிலைக்க வேண்டும்.நிலைக்கும்.புது இடம் புகுந்து சில நாட்களே ஆகிறது.இருப்பு கொள்ள வில்லை எனக்கு.சில நேரங்களில் எதுவும் வித்யாசபடவில்லை மற்ற நேரத்தில் எண்ணமோ குறை நெஞ்சை குடைகிறது


நண்பர்களைத் தேடாதே நல்ல நட்பைத் தேடு
தனிமையில் அறிவாய்  உன்னை நீயே


இசை எப்போதுமே துணை போகிறது.எல்லா நேரத்திற்கும் உகுந்த பாடல்களை எவனோ  ஒருவன்  எழுதிவிட்டு செல்கிறான்.


Facebook -உம வர வர பொழுது போக்க உதவ நிறுத்திவிட்டது.எனக்கும் தினசரி எழுத வேண்டும் என்று ஆசை தான்.எல்லா வற்றையும் விட எழுதுவதில் எண்ணமோ ஒரு சொட்டு மகிழ்ச்சி கூடவே எழுகிறது.ஆசை உண்டு எழுத வார்த்தைகள் வர மறுக்கிறது.அதுவும் நல்லதுதான் உங்களுக்கு ;)


கோவம்  வருகிறது.என் மேல்,சுற்றி இருப்பவர்கள் மேல்,இவர்கள் ஏன் இருக்கவேண்டும் என்று.இல்லாதவர்கள் மேல்,ஏன் இவர்கள் இல்லாமல் போகிறார்கள் என்று.


ஏனோ ஒரு நாள் விடுமுறை விட்டதன் பழி தீர்பதற்காக ,நான்கு நாட்களாக வெயில் பழி தீர்கிறது.வெயில் பேரை சொல்லி விடுமுறை விட்டால் கோவம் தீருமோ என்னவோ.


சில வகுப்புகளில் ஏன் தான் உட்கார்திருகோம் என்று தோன்றும்.கோவம் வரும்.படிப்பில் விளையாடுகிறார்களே என்று தோன்றும்.ஆசிரியப்பணி புனிதமானதல்லவோ? 
கேள்வி கேட்க ஆள் இல்லை.கல்லூரி என்றால் ஆசிரியர்கள் இப்படித்தான் என்று அமைந்து விட்டது மாற்றம்  வர வாய்ப்பும் இல்லாமல் போனது.இந்த நிலையிலும் சில ஆசிரியர்கள் உயிரை கொடுத்து பாடம் கற்பிக்கிறார்கள்.தலை வணங்க வேண்டியவர்கள் அவர்கள்


செய்திகள் பார்ப்பதை முற்றும் நிறுத்தி விட்டேன்.
ஏனோ அரசியலில் ஆர்வம் சற்றும் இல்லை
ஏமாற்றும் அரசியல்வாதிகள் 
ஏமாறும் மக்கள்
மாறப்போவதில்லை நாடு.


எல்லா பாடங்களையும் விட வாழ்கை பாடமே எனக்கு மிகவும் பிடித்ததாகவும் அடிக்கடி பேசப்படும் தலைப்பாகவும் இருந்து வருகிறது.ஏனோ எனக்கு நானே அறிவுரை கூறிக்கொள்வது  மிகவும் பிடித்தமான ஒரு வேலையாக உள்ளது
எழுதிவிட்டு நானே படித்து தோளில்  தட்டிக்கொள்வேன்.


புத்தகங்கள்,என்றும் எப்போதும் என்னுடன் வரக்கூடிய அறிவுச்செல்வம்
ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் படிக்கிறேன்.செலவிட நேரமும்  பணமும் அளவாக இருப்பதனால்.


சிறு குழந்தை ஒன்றை பேருந்தில் பார்த்தேன்.என்னை அறியாமல் சிரித்த தருணம்.பொக்கிஷம்.என்னுடைய நாள் முற்று பெற்றது.


தந்தையின் காதோரம் கதை சொல்லிக்கொண்டே வந்தது.நான் இறங்கும் வரையில் இறங்கிவிடதே என்று எண்ணிக்கொண்டே பயணித்தேன்.ஆசை நிறைவேறியது.


இன்றும் அதே இடத்தில் அதே பிச்சைக்காரன்.மற்றம் மானிடத்தத்துவம்   இல்லையோ?


எண்ணங்கள் பாய்கின்றன.ஒரு கோர்வையான பதிப்பு வந்துவிட்டதா  என்று படித்து பார்கிறேன்.பாதியில் நிறுத்தி,என்னுடைய ஆசைக்காக  எழுதுவது.எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம்.


என்னை விட வயதில் பெரியவர்களுடன் அதிகம் நேரம் செலவிடுகிறேன்.அதனாலோ என்னவோ மெதுவாக உலகம் சுற்றுவது போல எண்ணம் எனக்கு.


எதோ ஒன்று குறைகிறது.ஏன் என்று சொல்ல வார்த்தை வர வில்லை.
எழுத நினைத்தேன்.எழுதி விட்டேன்.
ஆசை,பேராசை.நிறை வேறியது.


பற்பல எண்ணங்கள்.
நல்ல நாள்.
கொஞ்சம் மோசமான நாள்.
பல நிறங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும்.
நாளை ஞாயிறு.எழுதுகையிலே முகத்தில் மலர்ச்சி.
நாள் நிறைவுக்கு வருகிறது. 


இதுவும் கடந்து போகும்.