Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Sunday, July 14, 2013

எங்க போன ரோசா

'மரியான்' திரைப்படத்தின் 'எங்க போன ராசா' பாடல் ஒரு ஐந்து மணி தொடங்கி மனதை பிசைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் காதல் வலியை அழகாகவும் அந்த வலியை நாமே உணரும்படியாகவும் வார்த்தைகளும் இசையும் அமைத்துக்கொடுத்துள்ளனர். 

நான் அதை ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் எழுத முனைந்துள்ளேன். 
முன்னெச்சரிக்கையாக ரகுமான் மற்றும் குட்டி  ரேவதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

**********
எங்க போன ரோசா 
சாயங்காலம் ஆச்சே,
நேரமாகி போச்சு,
நெஞ்சு எரிவாயே 

நீ இல்லாம போனா,
தரிசு நிலமாகும்,
வாழ்க்க தரிசு நிலமாகும் 

நீ இல்லாம போனா,
நெஞ்சு நஞ்சாகும்,
இந்த நெஞ்சும் நஞ்சாகும்

என்ன செய்ய ரோசா,
உன்மத்தம் ஆச்சே,
எங்க போன ரோசா

வானம் தலைக்குமேல் இருளுது 
மௌனமும் எனக்குள் கொல்லுது 
என் மனம் உன்குரல் தேடுது 
ஏனோ எனக்கென்ன கேடிது 

எங்க போன ரோசா,
நா என்ன செய்ய ரோசா 

எங்க போன ரோசா,
நா என்ன செய்ய ரோசா 
என் வாழ்க்க வீணாகுதே 

Friday, August 26, 2011

கிறுக்கல்கள்-2

காதல், வெட்கம் மற்றும் சில கவிதைக்கு அப்பாற்பட்ட  காரணங்கள்.

கையில் பட்டாம்பூச்சி வண்ணமாய்,
கடற்கரை மண்ணில்  காலடியாய்,
நெஞ்சில் உந்தன் முகம்
சுவடு வைத்து போனதடி.

சென்னை நகரில்,
கோடை கால குழாவைப்போல்,
உன்னை பார்க்கையில் , தாய் மொழியும் மறந்ததடி.

இருட்டிலும் பளிச்சிடும் பற்கள்,
வேலி போட்ட மல்லிகையடி.

ஆணுக்கு நானும்
பெண்ணுக்கு நீயும்
காதலுக்கு நாமும் உவமயடி.

இதுவரை நான் படித்த
கவிதைகளுக்கு அர்த்தம் புரிய வைத்து,
இனி நான் எழுதும் கவிதைகளுக்கு அர்த்தமாய் போனாயடி.

இரவில் நீ குழந்தைக்கு சோறூட்டும் அழகைக்கண்டு
மேகத்தினுள் மறைந்து,
வெண்ணிலவும் வெட்கப்படதடி.

கவித்துவம் 

காதோரம் கருமயிர் காற்றடித்து
கன்னத்தில்விழ
கைவிரலால் களைந்து
கண்சிமிட்டும் கவின்காட்சியை
காணக் கண் கோடிவேண்டும்.

வெள்ளைப்பொய்


வேறொருத்திக்கு நான் எழுதிய கவிதையை படித்து
என் கன்னத்தில் குழி விழுமா? என்றாய்.
ஆம், என்று சொல்லி உன்னை சிரிக்கவைத்து 
தேடினேன்.

உன் கன்னத்தில்.. குழி.



Saturday, January 1, 2011

கிறுக்கல்கள்

தமிழ் கவிதை கைக்குழந்தைப்போன்றது
எவன் வரைந்தாலும் படிக்க இனிமையாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் காரணத்தாலேயே நானும் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ கவிதை எழுத முனைகிறேன்

பல மோசமான, மொக்கையான கவிதைகளுக்கு இடையே சில வரிகள் திரும்பப்படிக்கும் அளவுக்கு அழகாய் அமைந்து விடுகின்றன.இருட்டில் தான் வெளிச்சத்தின் அருமை புலப்படும் அல்லவா? எனவே  அவ்வாறான உளறல்களும் அழகான சில கிறுக்கல்களும்
இங்கே

மெகா சீரியல்


தொலைக்கட்சியில் அவளுக்கு சுகப்ப்ரசவமானதா
என்று நகம் கடித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்,
தொட்டிலில் குழந்தை அழுது கொண்டிருந்தது

விதி

ஜாதிக்கலவரத்தில் மூவர் மரணம்,
சந்நிதி தெருவில் காவல் அதிகரிப்பு

பார்த்திபன் கனவு

பட்டம் வாங்கிக்கொண்டிருக்கும் மகனின் கனவை கலைத்தது
"விடிஞ்சாச்சுடா வயலுக்கு போ" என்ற தாயின் குரல்

வாழ்கை 

கீழே விழுந்த முறுக்கை எடுக்காதே என்றாள் மகனிடம்
அவளுக்கும் தெரிந்திருந்தது போலும்
மூன்றடி தள்ளி நடந்து வரும் பிச்சைக்காரனின் கடைசி மகனுக்கு
முருக்கென்றால் உயிர் என்று.

எதிர்காலம்

பச்சையாக இருப்பது வயல்,
அருகில் ஓடுவதுதான் ஆறு.
மகனுக்கு புத்தகம் பார்த்து கற்றுக்கொடுத்தான்
வருடம் 2050௦.

கருப்பு

கருப்பு, ஆகாத வண்ணமாம்
குருடனுக்கும் விளங்குவதாலோ?

தானம்

வலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதாம்
ஒரு கை உள்ளவனெல்லாம் தானம் வாங்குபவனாகவே  உள்ளான்

படிப்பு

தேர்வுக்கு படிக்கவேண்டும் ஆறு மணிக்கு எழுப்பு
என்று ஆறு வயது வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு உறங்க சென்றான்

மேதாவி

இலக்கியம் படித்த தமிழாசிரியர்
இலக்கணம் சொல்லிகொண்டிருந்தார்
எடுத்துக்காட்டாக, விவசாயியின் நாட்டுப்புறப்பாடல்.

முத்தம்

ஒரே மூச்சில் அவன் காதலுக்கு பதில் கூறினாள்,
முதல் முத்தம்.

பிரிவு

சேர முடியாமல் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின்
கதை பேசிக்கொண்டிருந்தன
சேரவே முடியாத தண்டவாளங்கள்

பக்தி

நீ கோவிலுக்குப்போகும் அந்த அரை மணி
நாத்திகனும் ஆத்திகன் ஆவான்.