அது மார்கழி மாதம். காலை பனி கூட கலையவில்லை. தெருமுனையில் நின்று எதையோ தேடிகொண்டிருந்தான். குளிரில் அவனுடைய கை காலெல்லாம் உதறிக்கொண்டிருந்தது. மெதுவாக தெருவுக்குள் நுழைந்தான். இதுவரை அவன் பார்த்த வீடுகளிலெல்லாம் மார்கழி மாதத்தில் கலர் கலராக கோலமிட்டிருக்கும். இந்த தெரு அவனுக்கு புதிர் போட்டது. எந்த வீட்டிலும் மனித சாயலே இல்லை. தெருவை அடைக்க வேண்டும் என்பதற்காகவே வீடு கட்டியிருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டான். அரை இருட்டில் அந்த தெருவுக்குள் அவன் நுழைய, அடி வயிற்றில் ஏதோ செய்தது அவனுக்கு. மெதுவாக நடந்தான். பனிக்காற்று எச்சரிக்கும் விதமாக எதிர் திசையில் அழுத்தியது. மூன்று வீடுகளை கடந்தோம் என்று விரல் விட்டு எண்ணினான். நான்காம் வீடு மூன்றிலிருந்து குறிப்பிடத்தக்க தூரத்தில் இருந்தது. நடுவே வெத்து நிலம். நேற்றிரவு மழை பெய்து ஓய்ந்ததை தேங்கிக்கடந்த தண்ணியை பார்த்து தெரிந்து கொண்டான். நாய் ஒன்று சத்தமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தது. எழுந்துவிடுமோ என்று பயந்து வேகமாக நடந்தான். சிறு வயதில் நாய் துரத்தியது ஞாபகம் வந்தது அவனுக்கு. நடப்பதை தொடர்ந்தான். 7-ஆம் நம்பர் வீட்டு வாசலில் ஊஞ்சல் ஒன்று ஆளில்லாமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. பின்னாடி திரும்பி நாய் பின் தொடர்ந்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டான். தொடர்ந்து நடந்தான். பத்து, பதினொன்னு, பன்னெண்டு, வாய் விட்டு எண்ணிக்கொண்டே வந்தான். பதினாலு. பதின்மூன்ரைக் காணவில்லை. சுற்று முற்றும் பார்த்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை. காற்றில் ஏதோ அசையும் சத்தம் கேட்டது. எதிரே உள்ள காலி இடத்தில் இடி தாக்கிய மரமொன்று துணை தேடி நின்று கொண்டிருந்தது அவனைப்போலவே. திடீரென்று ஒரு கை அவன் பின்தோளில் கை வைத்தது. சடார் என்று திரும்பினான்.
அவன் இடுப்பு உசரத்தில் ஒரு கிழவர்.
திக்கி திக்கி, "பதிமூனா நம்பர் வீடு..." என்றான். "நீ தான் அந்த புது பயலா? கொண்டா" என்று கையில் இருந்த செய்தித்தாளை வாங்கிக்கொண்டு மறு வார்த்தை பேசாமல் சென்றார்,எதிரே இருந்த வெத்து நிலத்தில் ஓரமாக ஒரு ஓலை குடிசைக்குள்.
மனதில் அடையாளம் குறித்துக்கொண்டான், பதின்மூன்றாம் நம்பர் வீடு.