கன்னத்தில் முத்தமிட்டால்: நெஞ்சைத்தொடும் திரைப்படம். ஓரளவுக்கு வயதானதிலிருந்தே பெண் குழந்தை ஒன்றை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. அமுதா என்னை பாதித்ததைப்போல் யாரும் இதுவரை என்னை சிந்தனையில் ஆழ்த்தியதில்லை. சிரிக்க வைத்திருக்கிறாள் அழ வைத்திருக்கிறாள். யோசிக்கவைத்திருக்கிறாள். சினிமாத்தனமாக இருக்காலாம், ஆனால் பல நாட்கள் மழை தூறும் வேளையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து உப்புக்கண்ணீரின் சுவடு பதிந்த கன்னத்தோடு நான் யோசிப்பது, யோசித்து முகம் மலர்வது , அவளைப்போல் ஒரு குழந்தை எனக்கென்று, பிறந்து, வளர்ந்து "அப்பா" என்று என்னிடம் ஓடி வந்து...
..கன்னத்தில் முத்தமிட்டால்.
***********
அந்தி வானத்தில் சூரியன் உறங்கச் சென்றுகொண்டிருந்தான். கிழக்கில் அதை பிரதிபலிக்குமாறு செக்கச்ச்சவேல் என்று இருந்த உள்ளங்காலை மேல் நோக்கி வைத்தவாறு படுத்துக்கொண்டிருந்தாள் அமுதா.
பாகிரதன் தவம் செய்து கங்கா தேவியை பூமிக்கு அழைத்து வந்தானாம். அவளின் வேகம் தாங்க முடியாது என்று புரிந்து கொண்டு சிவபெருமானை வணங்கி உதவுமாறு கேட்டானாம். அவரும் அவனுக்கு உதவியாக பூமிக்கு வந்து கங்கையை தலையில் தாங்கி நிலத்தில் விட்டார். கட்டுக்கு அடங்காத வேகத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடி, மலை காடு செடி கொடி எல்லாம் தாண்டி கடலை அடைந்தாள் கங்கை. அதைப்போலவே குவித்திருந்த கன்னத்தில் மேலும் கீழும் உமிழ்நீரா கண்ணீரா என்ற பாகுபாடு இல்லாமல் ஓடியவாறே இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது கும்பகர்ணனுக்கு சவால் விடுவேன் நான் என்று சொல்வது போல தூங்கிக்கொண்டிருந்தாள் அமுதா.
அமுதா பிறந்து நான்கே நாட்கள் ஆகியிருந்தது.
அவள் படுத்துக்கொண்டிருக்க, அறைக்குள் மூன்று பேர் நுழைந்தார்கள்.
கை கோர்த்த வண்ணம் இருவர். முகத்தில் போலிப்புன்னகயோடு ஒருத்தி.
சில நிமிடங்கள் அமைதியாக கடந்தது. கை கோர்த்துக்கொண்டிருந்த இருவரையும் தனியே விட்டுவிட்டு அடுத்தவள் வெளியே சென்றாள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அமுதாவை பார்த்தனர்.
"அமுதா", என்றாள் அந்த பெண்.
அன்றிலிருந்து புது வாழ்வு. அமுதாவுக்கும், அந்த இருவருக்கும்.
அமுதா உறக்கம் கலைந்து பசியில் அழுதாள்.
நாட்டின் மறுமூலையில் எங்கேயோ சாப்பிட்டுகொண்டிருந்தவளுக்கு விக்கியது.
************