Sunday, January 12, 2014

அக்ஷதை

"மேடை மேல இருக்கற  அந்த முருகன் படம் சாஞ்சு போயிர்க்கு பாரு", என்று பலமுறை சொல்லியும் ஒருத்தர் கூட கேட்கவில்லை. தாத்தாவும் விடுவதாய் இல்லை. ஏழாவது முறையாக தன் மகன் வெங்கி (வெங்கட்ராமன்) பெயரை கூப்பிட்டார். எட்டாவது முறை கூப்பிடுவதற்கு முன் ஒரு டம்பளர் காபி உள்ளே போனது.

**********

என்னதான் வாஷிங்டனில் நடத்தினாலும் மயிலாப்பூர் கணக்காக எல்லா சொந்த பந்தங்களும் வந்த வண்ணம் இருந்தனர். ஆறு பையன் மூன்று பெண்கள், அதில் வெங்கி மட்டுமே பெண் குழந்தைக்கு அப்பவாகும் பாக்கியம் பெற்றிருந்தான். அதன் பலனாக வர்ஷா அனைவருக்கும் செல்ல குழந்தை ஆனாள். தாத்தாவுக்கு இன்னும் சற்று அதிகமாகவே.

தானே பெயர் வைத்து, தானே நடை பழக்கிவிட்டு, குளிப்பாட்டுகையில் கண்ணில் ஜான்சன் சோப்பு விழுந்தால் பாட்டியை திட்டுவதில் முடித்து, அனைத்தும் தாத்தா பேத்தி சேர்ந்து போட்ட ஆட்டம். இன்று தோள் தாண்டி வளர்ந்து திருமண மேடையில் அமரப்போகும் வேளை வந்து விட்டது. மூன்றிலிருந்து இருபத்துமூன்று வரை ஏறியது வர்ஷாவின் வயது மட்டும் அல்ல, தாத்தாவின் முகத்தில் சுருக்கங்களும்.

பாட்டியை மறந்துவிட்டோமே, காவி கலர் பொடவை தான் முஹூர்தத்துக்கு,  என்று பெண் பார்க்கும் படலம் தொடங்கும் முன்னிலிருந்து பாட்டி ஒற்றைக்காலில் நிற்காத  குறை  தான்.

"எவ்ரிதிங் இஸ் ரெடி, வர்ஷாவ வர சொல்லுங்கோ.", என்று அமெரிக்கன் ஆக்செண்டில் செல் போன் சாஸ்த்ரிகள் கூற, வர்ஷாவின் அம்மா மணமகள் அறையிலிருந்து "டூ மினிட்ஸ்" என்று குரல் கொடுத்தார்.

"டூ மினிட்ஸா, உள்ள என்ன நூடில்ஸா பண்ணின்றுக்கா" என்று வெங்கி 'ஜோக்' அடிக்க, மாமனார் ஆயிற்றே என்று சஞ்சயும், தக்ஷனை கொறஞ்சுட போறது என்று சாஸ்த்ரிகளும் சிரிக்க முயன்றனர்.

சொன்னவாறே ரெண்டு நிமிடத்திற்குப்பின் , காவி புடவையும் புன்னகை மலர்ந்த  முகமுமாக, நெற்றிக்குங்குமத்தின் மேல் சின்னதாய் விபூதி வைத்ததைப்போல் வெட்கப்பட்ட கன்னங்களுக்கு  நடுவே லேசாக வெள்ளை பற்கள் தெரிய மேடையில் வந்து அமர்ந்தாள்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அத்தனை மகிழ்ச்சி. "எத்தன நாள் சொல்லிர்கேன் பொடவை கட்டிக்கோ அவ்ளோ அழகா இருப்பேனு, இப்போ தெரியறதா?" என்று செல்லமாக கோபித்துக்கொண்டார் பாட்டி.

**********

வெங்கி மடியில் அமர்ந்து, கழுத்தில் தாலி ஏற, தாத்தாவும் பாட்டியும் கண்ணில் நீர் வெயத்துக்கொண்டனர்.

"பட்டு கட்டிப் பூமுடிக்க,
மன்னன் வந்தான் கைப்பிடிக்க,
மணமகள் ஆகிறாள் இவள்,
மாங்கல்யம் காண்கிறாள்"  என்று பக்கத்துக்கு வீட்டு டிவியில் விளம்பரம் ஒளிபரப்பானது.

மந்தவெலியிலிருந்து, ஸ்கைப்பில் அக்ஷதை போட முடியவில்லை என்பதே தாத்தாவின் ஒரே வருத்தம்.