Friday, December 30, 2011

ஆரபி

"சத்தியமா சொல்றேன்டா அதே பொண்ணு தான். இந்த தரம் சீக்ரமாவே கண்டுபுடிச்சுட்டேன் அவ இருந்த கோச்ச. நான் ஏன் பொய் சொல்ல போறேன்?"

"என்னவோ சொல்றடா மகேஷா. எவ பின்னாடியோ சுத்திண்டு அப்பா பணத்த வீணடிக்காத. நா சொல்றத சொல்லிட்டேன் இதுக்கப்பறம் ஒன்னோட இஷ்டம்"

"என்னடா இப்படி எல்லாம் சொல்லற. யார் கேட்டாலும் சாய் தான் எனக்கு தோஸ்து-னு சொல்ற என்கிட்ட போயி எப்படியோ போங்க்றியே?"

"ஆரம்பிக்காதடா  ஒன்னோட புராணத்த. என்ன பண்ணனும் நான் ஒனக்கு?" 

"எதுவும் வேண்டாம். நான் சொல்றத கேட்டுண்டு பொறுத்துக்கோ. இத எல்லாம் ஷேர் பண்ணிக்க நேக்கு யார்டா இருக்கா இந்த ஊர்ல?"

"பேசாத படுடா. லேட்டா போனா அந்த எகனாமிக்ஸ் வாத்தியார் கடன்காரன் வெய்வான் கம்மனாட்டி னு எல்லா பொண்ணுங்க முன்னாடியும். நாளைக்கு சாயங்காலம் பேசிக்கலாம். தூங்கு"

சொல்லிவிட்டு தூங்கிவிட்டான் சாய். மகேஷ் தூக்கம் இழந்து ஒரு வாரம் ஆனது. 

"நாளைக்கு அவ பேரயாவுது கண்டு புடிக்கணும்" நினைத்துகொண்டே கடந்த ஆறு நாட்களின் நிகழ்வுகளை மனத்திரையில் ஓட்டிப்பார்தான் 

முதல் முறை அவன் அவளை பார்த்தது தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் தான். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்-இல் பாதி நடந்தது. அண்ணல் நோக்கினான் நோக்கினான் நோக்கினான்.

கடலும் ஆறும் ஒன்றோடோன்று பிணைகின்ற இடத்தில் நீர் இருக்குமே ஒரு கருநீல வண்ணத்தில், அந்த நிறத்தில் ஒரு புடவை. ரயில் பெட்டியில் உள்ள கைப்பிடிக்கு இணை குடுத்து அவள் காதில் உள்ள தோடுகள் ஆட, அவன் கண்ணிற்கு மட்டுமே பட்டிருக்க வேண்டுமே என்று தெரிந்த தெய்வத்தஎல்லாம் கூப்பிட வைத்தாள். ஆஞ்சநேயர் ஐயப்பன் உட்பட .

முதல் நாள் இப்படியே சென்றது. மாம்பலத்தில் இறங்கி விட்டாள் அவள். கூடவே அவன் மனமும் கால் முளைத்து ஓடிச்சென்று அவள் வலதுகையின் சிறு விரலை பிடித்துக்கொண்டது.

அடுத்தநாள் அதே ரயில். இளஞ்சிவப்பு நிற புடவை. அருகில் சென்று முகத்தை இன்னும் தெளிவாக பார்க்கலாம் என்று தைரியத்தை வரவைத்துக்கொண்டு அவளுக்கு ஒரு மூன்றடி தள்ளி நின்றான். 

கையில் இருந்த ரேடியோவிலிருந்து மகாராஜபுரம் நாகராஜன்  "ஜூதமுராரே" பாடுவது  கேட்டது அவனுக்கு. "சாயங்காலம் நாமளும் ஒரு காசெட்டு வாங்கணும்" என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்.

இப்படியே நான்கு நாட்கள் கழிந்தது. 

ஐந்தாவது நாள். பேசியே தீர வேண்டும் என்ற முடிவுடன் காலையில் கோவிலுக்கெல்லாம் சென்றுவிட்டு கிளம்பினான். 

கண்ணுக்கு இதம் தரும் கிளிப்பச்சையில் புடவை ஒன்று அணிந்திருந்தாள். "இவ்வளவு அழகு ஒருத்திக்கு ஆகாதும்மா" என்ற பிரம்மிப்புடன் நடந்தான் அவளை நோக்கி. 

இன்று பாலமுரளிகிருஷ்ணாவின் "தீன தயாலோ". கண்ணை மூடி ரசித்து கொண்டிருந்தாள். இவனும் பாட்டு முடிந்தவுடன் பேசிடலாம் என்று காத்துக்கொண்டேஇருந்தான். மீனம்பாக்கம் தொடங்கி சைதாபேட்டை வரை இழுத்துக்கொண்டே இருந்தார் பாலமுரளி. 

"அப்பாடா. ஒரு வழியா முடிஞ்சுது" என்று எண்ணிக்கொண்டே "எக்ச்குஸ் மீ?" என்றான்.

"அட மகேஷா !! சௌக்கியமா டா? எட்டாவதுல பாத்தது. எவளோ மாறிட்ட டா நீ! மீச எல்லாம் மொளச்சுடுத்து. ஞாமகம் இருக்கோல்லியோ என்ன? சாம்பு மாமா பையன் டா. சக்கரபாணி. எறங்கு கீழ. கோமதி சங்கர் ல காராமணி மிச்சர் சுட சுட போட்டுருப்பான். வா போயி சாப்டுண்டே பேசலாம். ஆறு வருஷ கதை பாக்கி இருக்கு பேச!"

"பூஜைல கரடி மாறி நோழஞ்சுட்டு காராமணி கேக்கறது பார் பக்கி" என்று சபித்துக்கொண்டே "கூடவே டிகிரி  காப்பியும் " என்று சக்கரபாணி சொன்னதை காதில் வாங்கிக்கொண்டே இறங்கினான்.

ஆறாவது நாள் தூக்கம் போச்சு.

ஏழாம் நாள். "இன்னிக்கு அவ பெயராவது  கேட்டுடுவேன்" என்று சாயிடம் சபதம் போடாத குறை. சொல்லிவிட்டு கிளம்பினான்.

அதே ரயில். சவுக்காரம் விளம்பரத்தில் வர அளவுக்கு வெண்மையான நிறத்தில் ஒரு புடவை, கருப்பு பூக்களுடன். "சினிமாக்காரியா இருந்தா அப்பா ஒத்துப்பாளா?" என்ற கவலையெல்லாம் வரத்தொடங்கியது அவனுக்கு.

அருகில் தோழி போலும். "இன்னிக்கும் முடியாதோ என்று கவலையோடு அவளை நோக்கி பார்த்தான். அவளும் நோக்கினாள்"

பாம்பே ஜெயஸ்ரீயின் "ஸ்ரீ சரஸ்வதி"  ஒலித்தது ரேடியோவிலிருந்து.

விரல்களால் ஏதோ சேதி சொன்னாள் அவள் தோழியிடம்.

"இந்தாங்க இத படிங்க" என்று மடித்த காகிதம் ஒன்றை கொடுத்தாள் அவள் தோழி.

"ஆறு நாளா ஒரே ராகத்துல பாட்டு கேட்டுண்டு இருக்கேனே. இன்னுமா புரியலை? அசடு.!" என்று ஆரம்பித்தது அந்த கடிதம்.

அவள் பெயர் ஆரபி.

14 comments:

 1. Thambi,engayo poiteenga. Also,

  "கடலும் ஆறும் ஒன்றோடோன்று பிணைகின்ற இடத்தில் நீர் இருக்குமே ஒரு கருநீல வண்ணத்தில், அந்த நிறத்தில் ஒரு புடவை."

  Made the poet in me sing. Good job. :)

  ReplyDelete
 2. தமிழில் இவ்வளவு நல்லா நீ எழுதுவியா?
  கலக்கிட்டே டா!

  Loved the way the story flowed :) and the similes! niiice :)

  ReplyDelete
 3. Nice da. sema script writer yu r. :)

  ReplyDelete
 4. Sema da thambi.. :)

  ReplyDelete
 5. LOLMAX @ மீனம்பாக்கம் தொடங்கி சைதாபேட்டை வரை இழுத்துக்கொண்டே இருந்தார் பாலமுரளி.. :)

  ReplyDelete
 6. nice da :) u ve written like a seasoned author...

  ReplyDelete
 7. Took a while for me to read it and understand. Wonderfully written!

  'கடலும் ஆறும் ஒன்றோடோன்று பிணைகின்ற இடத்தில் நீர் இருக்குமே ஒரு கருநீல வண்ணத்தில்' lovely!

  ReplyDelete
 8. "கைப்பிடிக்கு இணை குடுத்து அவள் காதில் உள்ள தோடுகள் ஆட"!!! அட அட! என்ன ஒரு வர்ணனை!!

  ReplyDelete
 9. Beautiful writing, no words!
  Thanks for such a wonderful read.. :)

  ReplyDelete